பீர் பாட்டிலால் தொழிலாளி குத்திக்கொலை தியேட்டரில் சினிமா பார்த்த போது நண்பர் வெறிச்செயல்


பீர் பாட்டிலால் தொழிலாளி குத்திக்கொலை தியேட்டரில் சினிமா பார்த்த போது நண்பர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 31 July 2018 4:30 AM IST (Updated: 31 July 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் தியேட்டரில் சினிமா பார்த்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் தொழிலாளி பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜீவா நகரை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் மாணிக்கம் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் சிவா (22). கூலித்தொழிலாளர்களான மாணிக்கமும், சிவாவும் நண்பர்கள் ஆவார்கள்.

நேற்று முன்தினம் இரவு மாணிக்கம், சிவா ஆகியோர் காவேரிப்பட்டணத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் “கடைகுட்டி சிங்கம்” படம் பார்க்க சென்றனர். அவர்கள் படம் பார்த்து கொண்டிருந்த போது திடீரென்று மாணிக்கத்திற்கும், சிவாவிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அந்த நேரம் ஆத்திரம் அடைந்த சிவா தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மாணிக்கத்தின் கழுத்தில் குத்தினார். இதில் அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் மாணிக்கம் சரிந்தார். இதையடுத்து சிவா அங்கிருந்து ஓடி விட்டார்.

இதை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம், சிவாவை பார்த்து கரடி என்று கூறியதாகவும், அதில் ஆத்திரம் அடைந்த சிவா, நண்பர் மாணிக்கத்தை பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், காயத்ரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் காவேரிப்பட்டணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story