சேலத்தில் 3 அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு 4 வாலிபர்கள் கைது


சேலத்தில் 3 அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 31 July 2018 5:24 AM IST (Updated: 31 July 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 3 அரசு பஸ்களின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரி சார்பில் வெளியான அறிக்கையில், அவருடைய உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும் பின்னர் டாக்டர்களின் சிகிச்சைக்கு பின் உடல்நிலை சீரடைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று டி.பெருமாபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தது. பொன்னம்மாபேட்டை கேட் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் காயமடைந்த பஸ் டிரைவரான நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 47) சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே போல இரவு 11 மணி அளவில் கோவையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சேலம் அருகே குமரகிரி பைபாஸ் ரோட்டில் சென்ற போது மர்ம நபர்கள் சிலர் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர். மேலும் அதே பகுதியில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு விரைவு பஸ்சின் முன்பக்க கண்ணாடியையும் மர்ம ஆசாமிகள் உடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து அரசு பஸ்களின் கண்ணாடியை உடைத்ததாக குமரகிரி பேட்டையை சேர்ந்த பிரதீப் (வயது 22), கார்த்திக்(26), இளங்கோ(20), சுரேஷ்குமார்(22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தி.மு.க. பிரமுகர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story