யானைகள் தாக்கி தம்பதி உள்பட 3 பேர் காயம்
கொடைக்கானல் அருகே, காட்டுயானைகள் தாக்கியதில் தம்பதி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த அஞ்சுவீடு, கணேசபுரம், பேத்துப்பாறை, புலியூர், அஞ்சூரான் மந்தை ஆகிய பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் ஆகியவை விளைவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக இந்த பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உலா வருகின்றன. இவை தோட்டத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பேத்துப்பாறை கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானைகள், வீடுகளின் முன்பு பயிரிட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின. மேலும், அருகில் இருந்த தனியார் தோட்டத்தின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்தன. அங்கு பயிரிட்டிருந்த பலாப்பழங்களையும், வாழைகளையும் சேதப்படுத்தின.
இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு அஞ்சுரான் மந்தையை சேர்ந்த பெரியதம்பி (வயது 45), தனது மனைவி விஜயலட்சுமி (43) மற்றும் சரோஜா (52) ஆகியோருடன் தனது தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த 3 காட்டுயானைகள் அவர்களை துரத்தின. யானைகளை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் யானைகள் துரத்தி வந்து அவர்கள் 3 பேரையும் தாக்கியது. இதில் விஜயலட்சுமியும், சரோஜாவும் படுகாயம் அடைந்தனர். பெரியதம்பி லேசான காயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் விஜயலட்சுமி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story