அடிப்படை சட்டங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு


அடிப்படை சட்டங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 1 Aug 2018 4:15 AM IST (Updated: 1 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை சட்டங்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட சார்பு நீதிபதி கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தனியார் அறக்கட்டளை மூலம் சர்வதேச மனித வணிகம் மற்றும் மனித கடத்தல் ஒழிப்பு தின விழா குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான வினோதா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மனோகரன் முன்னிலை வகித்தார். இதில் நீதிபதி வினோதா மாணவ-மாணவிகளிடையே பேசுகையில், 2016-ம் ஆண்டில் கடத்தல் சம்பந்தமாக இந்தியா முழுவதும் 8,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் சுரண்டலுக்காகவும், உழைப்பு சுரண்டலுக்காகவும் உடலுறுப்புகள் எடுப்பதற்காகவும் மனிதன் கடத்தப்பட்டு வணிகப் பொருளாக மாற்றப்படுகிறார்கள். நாம் தான் இதற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு சந்தேகப்படும் பட்சத்தில் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது சட்ட பணிகள் ஆணை குழுவிலோ புகார் மனு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகப்பட்சமாக 10 ஆண்டுகள் முதல் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் மற்றவர்களை துன்புறுத்தாமலும், கேலி வதை செய்யாமலும் இருக்கவேண்டும். சட்டத்தை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். அடிப்படை சட்டங்கள் அனைவரும் தெரிந்திருக்கவேண்டும் என்றார்.

முன்னதாக நீதிபதி வினோதா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களையும், சட்டம் சம்பந்தமாக கையேடுகளையும் வழங்கினார். மேலும் செஞ்சேரி, பாளையம் ஆகிய கிராமங்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் சமூக நலத்துறை பேராசிரியர் மகேஸ்வரி, தனியார் அறக்கட்டளை கள அலுவலர் கீதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story