அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்


அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 31 July 2018 10:00 PM GMT (Updated: 31 July 2018 6:58 PM GMT)

பயிர் காப்பீட்டு தொகை கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குறைதீர்க்கும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும், வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கடந்த 2016-2017-ம் ஆண்டு காப்பீடு செய்த பயிர்களுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை வரவில்லை என்று கூறி விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து இருக்கையில் அமர செய்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் சில விவசாயிகள், காப்பீட்டு தொகை குறித்து பேசும் போது எழுந்து நின்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை கட்டுப்படுத்தும் படி போலீசாரிடம், அதிகாரிகள் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

இதையடுத்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

விவசாயி ராஜேந்திரன்:- நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளிகள் முறையாக வேலை செய்யாமல், சாலையோரமாக படுத்து உறங்குகின்றனர். மேலும் அவர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

வருவாய் அலுவலர் வேலு:- நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை, விவசாய வேலைகளில் ஈடுபடுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

விவசாயி ராமசாமி:- 2016-2017-ம் ஆண்டு பயிர் காப்பீட்டு செய்த விவசாயிகள் சுமார் 38 ஆயிரம் பேருக்கு இன்னும் இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இதனால் கடன் தொல்லையால் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் இதுவரை 3 விவசாயிகள் இறந்துவிட்டனர்.

வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன்:- பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 3 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 24 லட்சம் இழப்பீட்டு தொகை வந்துள்ளது. இது இன்னும் 2 நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மற்ற விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை கிடைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

Next Story