இ–சேவை மையத்தின் மூலம் 20 வகையான சான்றிதழ்கள் பெறலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள இ–சேவை மையங்களின் மூலம் 20 வகை சான்றிதழ்கள் பெறலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள இ–சேவை மையங்களின் மூலம் 20 வகை சான்றிதழ்கள் பெறலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
இ–சேவை மையம்
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 383 இ–சேவை மையங்கள் உள்ளன. இந்த மையங்களின் மூலமாக தற்போது சாதிசான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள், பட்டாமாறுதல் மற்றும் சமூகநலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இ–சேவை மையங்கள் மூலமாக விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடும்ப குடிபெயர்வு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்புத்திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட இருப்பிட சான்றிதழ், முதல்பட்டதாரி சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
இணையதளத்தில்...
இந்த 20 வகையான சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் பெறுவதற்கு பொதுமக்கள் https://www.tnesevai.tn.gov.in/citizen என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம்.
மேலும் வருமான சான்றிதழ், சாதிசான்றிதழ், பிறப்பிட இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கு ஆன்ட்ராய்டு செல்போன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதற்கான சேவை கட்டணமாக ரூ.60–ஐ இணையதள வங்கி முறை அல்லது கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story