புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 5 பேர் கைது
ஆரோவில் அருகே புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் தொழிற்சாலையில் பணிகளை எடுப்பதில் நடந்த மோதலில் சொந்த கட்சியினரே அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விழுப்புரம்,
புதுச்சேரி பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் ஜோசப் என்ற ரவி. இவர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவராகவும், ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவராகவும் இருந்து வந்தார். நேற்று முன்தினம் பகல் 11½ மணியளவில் தனது வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு வந்தார்.அப்போது அவரை 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் பின் தொடர்ந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே ஜோசப்பை முந்திச்செல்வதுபோல் வேகமாக வந்து ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த ஆசாமி, அரிவாளால் வெட்டினார். இதில் பின்னந்தலையில் பலத்த வெட்டு விழுந்து அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார்.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜோசப் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.ஜோசப்பின் தம்பி ராஜுவிடம் போலீசார் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது, பெரிய காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்ட போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த தொழிற்சாலைக்கு ஆதரவாக ஜோசப் செயல்பட்டதாக தெரிகிறது.
இந்த தொழிற்சாலை விவகாரம் குறித்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஜோசப்பின் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நடந்தது.
இதன்பின் கவர்னர் கிரண்பெடி அந்த தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு செய்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுத்தார். இதைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டவருக்கும், ஜோசப் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு அடிதடியில் இறங்கியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட விரோதத்தை தொடர்ந்து ஜோசப்புக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் அவரை உஷார்படுத்தி உள்ளனர். இந்தநிலையில் ஜோசப் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் கூலிப்படையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோசப் கொலை தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர்களான பெரியகாலாப்பட்டு சந்திரசேகர், பார்த்திபன், பிள்ளைச்சாவடி முகுந்தராஜ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகரான பெரிய காலாப்பட்டு செல்வக்குமார், பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த குமரேசன், விசுவநாதன், ஆனந்த் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ஆனந்த் (43), குமரேசன் (40), சந்திரசேகர் (55), செல்வகுமார் (41) ,பார்த்திபன் (47) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஒப்பந்த பணிகளை மேற்கொள்வது தொடர்பான மோதலில் காங்கிரஸ் பிரமுகர் ஜோசப்பை என்.ஆர். காங்கிரசாருடன் சேர்ந்து சொந்த கட்சியினரே கூலிப்படை வைத்து பழிதீர்த்த சம்பவம் காங்கிரசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கூலிப்படையை சேர்ந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story