கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் 7-ந்தேதி வேலை நிறுத்தம்-மறியல்


கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் 7-ந்தேதி வேலை நிறுத்தம்-மறியல்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:15 AM IST (Updated: 1 Aug 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 7-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்திலும், மறியலிலும் ஈடுபட உள்ளதாக அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி தெரிவித்தார்.

திருச்சி,

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11, 12-ந்தேதிகளில் ஈரோட்டில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் நடத்த உள்ளனர். இந்த நிலையில் சங்கத்தின் சார்பில் திருச்சியில் கோரிக்கை விளக்க மாநாடு ஜங்ஷனில் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் வீரமுத்து ஆகியோர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி கூறியதாவது:-

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளி தொடங்க அனுமதிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி நாடு முழுவதும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

தமிழகத்தில் அன்றைய தினம் வேலை நிறுத்தத்துடன் சாலை மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது. ஆட்டோ, கார், வேன், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள், வாகன பழுது பார்க்கும் பட்டறை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளியினர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் கார், வேன், ஆட்டோ ஓடாது. திருச்சியில் 7-ந்தேதி தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story