கிராம நிர்வாக எல்லை பிரச்சினையால் பொதுமக்கள் அலைக்கழிப்பு
சேலத்தில் கிராம நிர்வாக அலுவலக எல்லை பிரச்சினையால் அலைக்கழிக்கப்படுவதாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சேலம்,
சேலம் குகை அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கூலி தொழிலாளர்களாக வேலை செய்கிறோம். நாங்கள் இதுவரை சேலம் தாலுகாவில் உள்ள டவுன் கிராம நிர்வாக அலுவலரிடம் வருவாய் சான்றிதழ்கள் பெற்றுவந்தோம்.
இந்தநிலையில் கடந்த 6 மாதங்களாக வருவாய் சான்றிதழ்கள் பெறுவதற்காக டவுன் கிராம நிர்வாக அலுவலரிடம் செல்லும்போது, எங்களுக்கு தாதகாப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தான் பொறுப்பு என்கிறார்கள். உங்களுக்கு சேலம் தெற்கு தாலுகா தான் சம்பந்தப்பட்டது என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து சான்றிதழ்கள் பெற தாதகாப்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றால், அவர் உங்களுக்கு டவுன் தாலுகாவில் உள்ள டவுன் கிராம நிர்வாக அலுவலர்தான் பொறுப்பு என்று கூறி திருப்பி அனுப்பி விடுகிறார். சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் கேட்டு நாங்கள் 2 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்சினையால் மாறி, மாறி அலைக்கழிக்கப்படுகிறோம்.
இதனால் சான்றிதழ்கள் பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டு பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை மற்றும் பிற சலுகைகள் பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாலுகா அலுவலகம் எதுவென்று நிர்ணயம் செய்து உதவிபுரியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story