விருதுநகர் அருகே விவசாய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் நகைகள் மோசடி? நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விருதுநகர் அருகே விவசாய கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளை வங்கி நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக கலெக்டரிடம் புகார் மனு கொடுத்த மக்கள் நகைகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி உள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள கோட்டையூரில் தொடக்க விவசாய கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் செயலாளராக மணிவண்ணன் என்பவரும், நகை மதிப்பீட்டாளராக நந்தகுமார் என்பவரும் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்த வங்கியில் கோட்டையூர், துலுக்கப்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, வி.சுந்தரலிங்காபுரம், சின்னையாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தங்கள் தேவைக்கு தங்க நகைகளை அடகுவைத்து கடன் பெற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு சென்ற கிராம மக்களிடம் வங்கி செயலாளர் மணிவண்ணன் முறையாக பதில் கூறவில்லை என்றும், நகை மதிப்பீட்டாளர் நந்தகுமார் நகைகளை திருப்ப பணம் கட்ட சென்றவர்களை சாத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு அழைத்துச் சென்று அங்கு பணத்தை கட்ட செய்ததாகவும் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும் மீதமுள்ள பணத்தை கட்டி அடகு வைத்தவர்கள் திருப்பி தருமாறு கேட்டால் நகைகள் இல்லை என செயலாளர் கூறுவதால் நகைகளை மோசடி செய்து இருக்காலம் என்றும் அடகு வைத்து நகைகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கிராம மக்கள் கோரி உள்ளனர். இதற்கிடையில் நகை மதிப்பீட்டாளர் நந்தகுமார் மாயமாகிவிட்டதாக கிராம மக்களிடம் வங்கி நிர்வாகம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக கூட்டுறவு சங்கங்களில் அடகுவைத்த நகைகளில் முறைகேடு ஏதேனும் நடந்தால் அது பற்றி விசாரணை நடத்தி பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்க தாமதம் ஆகும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறும் நிலையில் கூட்டுறவு தணிக்கை அதிகாரிகள் சங்க கணக்குகளை ஆய்வு செய்து மண்டல கூட்டுறவு துணை பதிவாளரிடம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் அதன் அடிப்படையில் துணை பதிவாளர் வணிகவியல் குற்றப்புலனாய்வு போலீசில் புகார் செய்த பின்னர் தான் வழக்குபதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நடைமுறைகளை முடிப்பதற்கே மிகுந்த கால தாமதம் ஆவதால் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் தலைமறைவாகும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த நடைமுறையில் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் உரிய மாற்றம் செய்வதுடன், கூட்டுறவு சங்கங்களில் அவ்வப்போது தணிக்கை செய்வதற்கும் முறைகேடுகளை கண்டறிந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் தகுந்தபடி விதிகளை மாற்றம் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.