கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கவர்னர் கிரண்பெடி புதுவையை விட்டு வெளியேறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும் புதுச்சேரியை விட்டு அவர் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று நேரு வீதி–மிஷன் வீதி சந்திப்பில் அவர்கள் கூடினார்கள்.
அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. ஆம்பூர் சாலை சந்திப்புக்கு ஊர்வலமாக வந்த போது அதற்கு மேல் செல்லவிடாமல் போலீசார் தடுத்தனர்.
அங்கு கவர்னர் கிரண்பெடி புதுவையை விட்டு வெளியேறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர் முருகன் மற்றும் நிர்வாகிகள் சீனுவாசன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.