சத்தியமங்கலத்தில் சினிமா பாணியில் மர்மநபரை விரட்டிய போலீசார், பெண்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு


சத்தியமங்கலத்தில் சினிமா பாணியில் மர்மநபரை விரட்டிய போலீசார், பெண்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Aug 2018 3:30 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் சினிமா பாணியில் மர்மநபரை போலீசார் விரட்டினார்கள். பெண்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் மற்றும் தேள்கரடு வீதியில் 4–க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நகைகளை பறித்து சென்று உள்ளனர். குறிப்பாக அதிகாலை நேரங்களில் நடைபயிற்சி செல்லும் பெண்களிடம்தான் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள். மேலும் போலீசார் மாறுவேடங்களில் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சத்தியமங்கலம் பவானிசாகர் ரோட்டில் சத்தியமங்கலம் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஏராளமான ஆண்கள், பெண்கள் என திரளானோர் நடைபயிற்சி மேற்கொண்டனர். இதில் காந்திநகர் மேட்டில் உள்ள ஒரு டீக்கடையில் 25 வயது வாலிபர் ஒருவர் ‘டீ’ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வாலிபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து விரைவாக செல்ல முற்பட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் அந்த நபர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வாலிபரை பின்னால் சினிமாவில் நடப்பது போல் விடாமல் துரத்தினார்கள். வெகுதூரம் அந்த நபர் ஓடினார். ஆனால் சலிப்பு தட்டாமல் போலீசாரும் அந்த நபரை துரத்தினார்கள்..

அப்போது அந்தப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த பெண்கள் மர்மநபர் ஒருவர் வேகமாக ஓடிவருவதை கண்டதும் திருடன், திருடன் என்று கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த மர்மநபரை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அப்போது அங்கு வந்த போலீசார் மர்மநபரை பிடித்தனர். இருப்பினும் அந்த மர்மநபர் தான் அணிந்து இருந்த சட்டையை கிழித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று காட்டுப்பகுதிக்குள் மறைந்துவிட்டார்.

போலீசாருக்கு டிமிக்கு கொடுத்துவிட்டு ஓடிய வாலிபர் யார்? அவர்தான் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் அந்த மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளதால் என்பது குறித்து சோதனை செய்தனர்.

நேற்று அதிகாலை நேரத்தில் வாலிபர் ஒருவரை போலீசார் துரத்திச்சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story