காரைக்குடி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி


காரைக்குடி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 31 July 2018 9:30 PM GMT (Updated: 31 July 2018 8:29 PM GMT)

காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சக்கரத்தில் சேலை சிக்கியதில் கீழே விழுந்த பெண் பரிதாபமாக இறந்துபோனார்.

காரைக்குடி,

புதுக்கோட்டை கணேஷ் நகர் 4–வது வீதியில் வசித்து வருபவர் ரகமத்துல்லா. இவருடைய மனைவி தில்சார் பேகம்(வயது 45). இவர்களது மகளை காரைக்குடியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்தநிலையில் தில்சார் பேகம், தனது மகன் அஜீஸ் உடன் காரைக்குடி வாட்டர் டேங்க் பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றார்.

அங்கு மகளை பார்த்துவிட்டு மீண்டும் புதுக்கோட்டை நோக்கி தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அஜீஸ் மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் தில்சார் பேகம் அமர்ந்திருந்தார்.

காரைக்குடி அருகே நேமத்தான்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, தில்சார் பேகத்தின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் காயமடைந்த தில்சார் பேகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தில்சார் பேகம் இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story