மானாமதுரையில் பாலத்தை சீரமைக்கக்கோரி 10 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்கள்


மானாமதுரையில் பாலத்தை சீரமைக்கக்கோரி 10 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்கள்
x
தினத்தந்தி 31 July 2018 10:15 PM GMT (Updated: 31 July 2018 8:30 PM GMT)

மானாமதுரை காட்டு நாயக்கன் குடியிருப்பிற்கு செல்லும் பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை சீரமைக்கக்கோரி 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மானாமதுரை,

மானாமதுரையில் உள்ள ஆதனூர் கண்மாய் அருகே காட்டு நாயக்கன் இனத்தைச் சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வெவ்வேறு கூலி வேலைகள் செய்து வரும் இவர்கள், தங்களது வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், உதவியும் செய்து வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதனூர் கண்மாய் அருகே உள்ள இடத்தை அரசு வழங்கி அவர்கள் வசிப்பதற்கு ஏற்ற வழிவகையை செய்து கொடுத்தது. இந்த இடத்திற்கு செல்லும் வழியில் ஆதனூர் கண்மாய்க்கு செல்லும் வரத்துக்கால்வாய் உள்ளதால், அதில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் தாங்கு கற்கள் சரிந்து, அது பிடிமானம் இல்லாமல் உள்ளது.

காட்டுநாயக்கன் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் அந்த பாலத்தை ஒருவித அச்சத்துடனேயே கடந்து சென்று வருகின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பாலத்தின் சேதத்தை காரணம் சொல்லி வர மறுக்கின்றன. இதனால் குடியிருப்பு வாசிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே இந்த பாலத்தை சீரமைத்து தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பாலத்தை சீரமைக்க இனியாவது முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story