மராத்தா போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 3 பேர் தற்கொலை உயிர்நீத்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு


மராத்தா போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 3 பேர் தற்கொலை உயிர்நீத்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 Aug 2018 4:30 AM IST (Updated: 1 Aug 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதன் மூலம் போராட்டத்தில் உயிர் நீத்ேதார் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பை, 

மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதன் மூலம் போராட்டத்தில் உயிர் நீத்ேதார் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

மராத்தா போராட்டம்

மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் மராத்தா சமுதாயத்தினரின் தீவிர போராட்டம் வன்முறை களமாக மாறியுள்ளது.

மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கைக்காக உயிர் தியாகம் செய்து வருகிறார்கள்.

அவுரங்காபாத்தில் கடந்த 25-ந்தேதி நடந்த போராட்டத்தின் போது, காகாசாகேப் ஷிண்டே என்ற வாலிபர் அங்குள்ள கோதாவரி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துகொண்டார். இதன்பின்னர் தான் மராத்தா சமுதாயத்தினரின் போராட்டம் மாநிலம் முழுவதும் மிக தீவிரமானது.

இதேபோல அவுரங்காபாத்தை சேர்ந்த ஜெகநாத் சோனவானே விஷம் குடித்தும், பிரமோத் ஜெய்சிங் ஹோரே என்பவர் ரெயில் முன் பாய்ந்தும் தற்கொலை செய்துகொண்டனர்.

மேலும் 3 பேர் தற்கொலை

இந்தநிலையில், மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினைக்கு ஆதரவாக நாந்தெட்டை சேர்ந்த கச்ரு கல்யானே(வயது38) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் பீட் மாவட்டம் கெத் தாலுகாவில் உள்ள வீடா கிராமத்தை சேர்ந்த அபிஜித் தேஷ்முக் (35) நேற்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அருகே உள்ள மரத்தில் அவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மராத்தா போராட்டத்துக்கு ஆதரவாக உயிர் தியாகம் செய்வதாக கூறப்பட்டு உள்ளது என பீட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர் தெரிவித்தார்.

அவுரங்காபாத் மாவட்டம் புலம்பிரி தாலுகா வதோத் பஜார் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் பிரதிப் ஹரி, மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்காக நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதன் மூலம் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

தீக்குளிக்க முயற்சி

இதற்கிடையே மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் நேற்றும் நீடித்தது. நாந்தெட் மாவட்டத்தில் நேற்று போராட்டக்காரர்கள் ஒரு அரசு பஸ்சுக்கு தீவைத்தனர்.

லாத்தூரில் நடந்த போராட்டத்தில் 8 பேர் தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

புனே அருேக உள்ள சாக்கனில் நேற்று முன்தினம் ஏராளமான வாகனங்கள் தீ வைக்கப்பட்டும், அடித்து நொறுக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டன. அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story