சாக்கனில் நடந்த பயங்கர வன்முறைக்கு மராத்தா பேரணியில் சமூக விரோதிகள் புகுந்ததே காரணம் புனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
சாக்கனில் நடந்த வன்முறைக்கு மராத்தா பேரணியில் சமூக விரோதிகள் புகுந்ததே காரணம் என புனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி அளித்துள்ளார்.
புனே,
சாக்கனில் நடந்த வன்முறைக்கு மராத்தா பேரணியில் சமூக விரோதிகள் புகுந்ததே காரணம் என புனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி அளித்துள்ளார்.
வன்முறை
புனே அருகே உள்ள சாக்கனில் நேற்றுமுன்தினம் மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். இந்த பேரணியின் போது, திடீர் வன்முறை வெடித்தது.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் பஸ்கள் மற்றும் வாகனங்களை தீ வைத்து கொளுத்தினார்கள். கல்வீசி வாகனங்களின் கண்ணாடிகளை நொறுக்கினர். போலீசாரையும் கடுமையாக தாக்கினார்கள். இதில் 6 போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த பயங்கர வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, அதிவிரைவு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வன்முறை தொடர்பாக போலீசார் சுமார் 4 ஆயிரம் பேரை தேடி வருகின்றனர். வன்முறை காரணமாக சாக்கனில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.
இதன் காரணமாக நேற்று சாக்கனில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் புனே- அகமதுநகர் இடையே அரசு பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சமூக விரோதிகள் காரணம்
இந்தநிலையில், சாக்கனில் மராத்தா சமுதாயத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை உண்டானதற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என புனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் பாட்டீல் கூறினார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராத்தா சமுதாயத்தினர் பேரணி தொடங்கியது முதல் மதியம் 12.30 மணி வரையிலும் அமைதியாக தான் சென்று கொண்டிருந்தது. கூட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் சிறிய, சிறிய குழுவாக பிரிந்து வாகனங்களை சேதப்படுத்தினர்.
வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கண்டறியும் நடவடிக்கை நடந்து வருகிறது. சாக்கனில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. எனவே வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story