மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10½ கோடி கடன் உதவி கலெக்டர் வழங்கினார்


மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10½ கோடி கடன் உதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Aug 2018 3:45 AM IST (Updated: 1 Aug 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

இந்தியன் வங்கி சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் கடன் உதவியை கலெக்டர் ராமன் வழங்கினார்.

ஆம்பூர்,


இந்தியன் வங்கி வேலூர் மண்டலம் சார்பில், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் ஆம்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமுக்கு இந்தியன் வங்கியின் மண்டல துணை பொது மேலாளர் எஸ்.சுந்தரராஜ் தலைமை தாங்கினார். உதவி பொது மேலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வி.முருகேசன் வரவேற்றார்.

முகாமில் மாவட்ட கலெக்டர் எஸ்.ராமன் கலந்துகொண்டு 211 மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் கடன் உதவியை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காக ‘வெல்மா’ அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சுமார் 200 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கி வருகிறது. அவர்களுக்கு ரூ.600 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். சமுதாய கட்டமைப்புகள் பெண்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. பெண்களை மையமாக கொண்டு தான் இந்த சமுதாயம் இயங்கி வருகிறது. பெண்கள் இந்த சமுதாயத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் பெரியசாமி, மகளிர் திட்ட அலுவலர் சிவராமன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்துகொண்டனர். 

Next Story