அரசு பொது விடுதிகளை திறக்க 15 நாட்களில் அறிக்கை தயாரிக்க வேண்டும் 2–வது நாள் கலெக்டர்கள் மாநாட்டில் குமாரசாமி பேச்சு


அரசு பொது விடுதிகளை திறக்க 15 நாட்களில் அறிக்கை தயாரிக்க வேண்டும் 2–வது நாள் கலெக்டர்கள் மாநாட்டில் குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 1 Aug 2018 12:15 AM GMT (Updated: 31 July 2018 9:49 PM GMT)

அனைத்து சமுதாய மாணவர்களும் தங்கி படிக்கும் வகையில் அரசு பொது விடுதிகளை திறக்க 15 நாட்களில் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று 2–வது நாள் கலெக்டர்கள் மாநாட்டில் குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

அனைத்து சமுதாய மாணவர்களும் தங்கி படிக்கும் வகையில் அரசு பொது விடுதிகளை திறக்க 15 நாட்களில் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று 2–வது நாள் கலெக்டர்கள் மாநாட்டில் குமாரசாமி கூறினார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கர்நாடக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர்களின் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் பெங்களூருவில் தொடங்கியது. இந்த மாநாட்டை முதல்–மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்து பேசினார். பல்வேறு துறைகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் கலெக்டர்களின் 2–வது நாள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை நடந்தது. இந்த மாநாட்டை குமாரசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:–

ஜனதா தரிசனத்தில் மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த மனுக்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மனு மீது நடவடிக்கை எடுத்த பிறகு அவற்றின் பின்னால் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது என்று எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் மட்டுமே அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று கருத முடியும்.

அலட்சியம் காட்டக்கூடாது

எனது அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் மனுக்கள் மீது மாவட்டத்திற்குள்ளேயே நடவடிக்கை எடுத்து அவற்றை முடித்து வைக்க வேண்டும். மீண்டும் அந்த மனுவை எனது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டாம். அவ்வாறு மனுக்களை திரும்ப அனுப்பினால் நடவடிக்கை எடுப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும். ஜனதா தரிசனத்தில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நீங்கள் அலட்சியம் காட்டக்கூடாது.

மாதத்திற்கு ஒருமுறை மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை நீங்கள் நடத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். சிறுபான்மையினர் நலத்துறையில் முதல்–மந்திரி பெயரிலான திட்டங்களை செயல்படுத்துவதில் கலபுரகி, கோலார் மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது ஏன்?. அதுபற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் வழங்க வேண்டும்(அப்போது அந்த கலெக்டர்கள், அந்த திட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதனால் தான் அந்த திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர்).

கழிவறைகளை தூய்மையாக...

எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து அறிக்கை தயாரித்து அடுத்த 2 நாட்களில் தலைமை செயலாளரின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளுக்கு போதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் அவற்றை பராமரிப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் அந்த கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளன.

மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான பொருட்களும் தரமானதாக இருக்க வேண்டும். அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை தரமாகவும், ருசியாகவும் தயாரித்து வழங்க வேண்டும். அங்கு கழிவறைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி இடைநீக்கம்

மாதத்திற்கு ஒரு முறையாவது அரசு விடுதிகளுக்கு திடீரென சென்று ஆய்வு நடத்த வேண்டும். அங்கு விடுதி காப்பாளர்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் அவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். விடுதிகளில் காலியிடங்கள் இருந்தால் அதை நிரப்ப நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதி காப்பாளர்களை நியமிக்கும்போது, அந்த பணியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி, “அனைத்து சமுதாயங்களை சேர்ந்த மாணவர்களும் தங்கி படிக்கும் வகையில் ஒரு அரசு பொது விடுதியை தொடங்க வேண்டும். அதில் அனைத்து சமுதாய மாணவர்களும் தங்கி படித்தால், அவர்களிடம் தொடக்க நிலையிலேயே சாதி பாகுபாடு பார்க்கும் மனநிலை இருக்காது. ஒருவன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்ற மனநிலையும் அவர்களிடம் உண்டாவது தடுக்கப்படும்“ என்றார்.

மந்திரிகள் வரவேற்றனர்

மந்திரி சிவசங்கரரெட்டியின் இந்த ஆலோசனையை அனைத்து மந்திரிகளும் வரவேற்றனர். இது மிக சரியான ஆலோசனை என்று பாராட்டிய குமாரசாமி, இதுபற்றி 15 நாட்களுக்குள் திட்ட அறிக்கையை தயாரித்து கலெக்டர்கள் அரசுக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனை அடிப்படையில் இந்த திட்டம் சில மாவட்டங்களில் தொடங்கப்படும்“ என்றார்.

மேலும் பேசிய குமாரசாமி, “அரசின் பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. அந்த வீடுகள் கட்டும் பணியை குறித்த காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். ஐதராபாத்–கர்நாடக பகுதியில் அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தனியாக ஒரு கூட்டம் நடத்தப்படும்“ என்றார்.

பங்கேற்ற மந்திரிகள்

இந்த மாநாட்டில் மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.சி.தம்மண்ணா, ஜெயமாலா, கிருஷ்ண பைரேகவுடா, பிரியங்க் கார்கே, கே.ஜே.ஜார்ஜ், வெங்கடராவ் நாடகவுடா, சா.ரா.மகேஷ், ஜி.டி.தேவேகவுடா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story