சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் காருடன் கடத்தல், கார் விபத்தில் சிக்கியதால் கடத்தல் கும்பல் பிடிபட்டது


சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் காருடன் கடத்தல், கார் விபத்தில் சிக்கியதால் கடத்தல் கும்பல் பிடிபட்டது
x
தினத்தந்தி 31 July 2018 11:00 PM GMT (Updated: 31 July 2018 10:17 PM GMT)

சாப்ட்வேர் நிறுவன உரிமையாளரை காருடன் கடத்திச் சென்றபோது அந்த கார் விபத்தில் சிக்கியதால் கடத்தல்காரர்கள் பிடிபட்டனர்.

பூந்தமல்லி, 

சென்னை கொளத்தூர், 8-வது தெருவை சேர்ந்தவர் பிரமோத் (வயது 38). அண்ணா நகரில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாப்ட்வேர் நிறுவனத்தை மூடி விட்டு வெளியே வந்த பிரமோத், வீட்டுக்கு செல்வதற்காக அவருடைய காரில் ஏற முயன்றார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரமோத்தை சரமாரியாக தாக்கியது. பின்னர் அவர்கள் பிரமோத்தின் கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து காரின் பின் சீட்டில் தூக்கி போட்டுக்கொண்டு காரோடு அவரை கடத்திச் சென்றனர்.

இந்த கார் அம்பத்தூர் எஸ்டேட் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சமாளித்து அதனை நிறுத்திவிட்டார்.

பின்னர் அவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளை காருக்கு குறுக்கே நிறுத்தி விட்டு, காரை ஓட்டி வந்தவரிடம் மோட்டார் சைக்கிளில் ஏன் இடித்தாய்? என்று கேட்டார். இதில் அவருக்கும், காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.

இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரமோத் தனது காலால் காரின் கண்ணாடி மற்றும் கதவை பலமாக உதைத்தார். இதில் கார் குலுங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காருக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் காருக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிரமோத்தை கடத்தி வந்ததை பொதுமக்கள் பார்த்துவிட்டதால் பதறிப்போன கடத்தல்காரர்கள் காரை விட்டு, விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற பொதுமக்கள் ஒருவரை மடக்கிப்பிடித்தனர். மற்ற 3 பேரும் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.

காரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த பிரமோத்தை பொதுமக்கள் மீட்டனர். மடக்கிப்பிடித்த கடத்தல்காரரை அம்பத்தூர் எஸ்டேட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பிரமோத் கடத்தப்பட்டது அண்ணா நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், பொதுமக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் அண்ணா நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

அண்ணா நகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அயனாவரத்தை சேர்ந்த ஜானகிராமன் (30) என்பதும், தப்பி ஓடியவர்கள் ஓட்டேரியை சேர்ந்த பிரான்சிஸ் (30), இம்ரான்செரீப் (32) மற்றும் பட்டாளத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற அப்பு (28) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் பிடிக்க அண்ணா நகர் போலீஸ் உதவி கமிஷனர் குணசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரமோத், சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதால் அவரிடம் அதிகம் பணம் இருக்கும் என்று எண்ணிய கடத்தல்காரர்கள் 4 பேரும் அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவரை கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களில் பிரான்சிஸ், பிரபாகரன் ஆகியோர் ஏற்கனவே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாபாணியில் நடந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story