பெங்களூருவில் ஓடும் காரில் இருந்து கீழே குதித்து நடனமாடும் விபரீத சவாலை தடுக்க விழிப்புணர்வு போலீஸ் அதிகாரி தகவல்


பெங்களூருவில் ஓடும் காரில் இருந்து கீழே குதித்து நடனமாடும் விபரீத சவாலை தடுக்க விழிப்புணர்வு போலீஸ் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 1 Aug 2018 5:30 AM IST (Updated: 1 Aug 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், ஓடும் காரில் இருந்து கீழே குதித்து நடனமாடும் ‘கிகிசேலஞ்ச்‘ எனப்படும் விபரீத சவாலை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரி கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில், ஓடும் காரில் இருந்து கீழே குதித்து நடனமாடும் ‘கிகிசேலஞ்ச்‘ எனப்படும் விபரீத சவாலை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரி கூறினார்.

‘கிகிசேலஞ்ச்‘ நடனம்

தற்போதைய காலக்கட்டத்தில் உயிருக்கு ஆபத்தான சம்பவங்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த வரிசையில் இப்போது ‘கிகிசேலஞ்ச்‘ நடனம் இணைந்துள்ளது. அதாவது, ஓடும் காரில் இருந்து கதவை திறந்து கீழே குதித்து மெதுவாக செல்லும் காரை பின்தொடர்ந்து ஓடிக்கொண்டே பாடலுக்கு ஏற்ப நடனமாடுவதும், பின்னர், மீண்டும் காரில் ஏறி அமர்வதும் தான் ‘கிகி சேலஞ்ச்‘ நடனம் ஆகும்.

இதை விளையாட்டாகவும், சாகசம் போன்றும் இளம்வயதினர் செய்து வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த விபரீத சவாலான ‘கிகிசேலஞ்ச்சை‘ மேற்கொள்ளும்போது விபத்தில் சிக்குவது, கால் தவறி கீழே விழுந்து காயமடைவது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் இந்த வகையான நடனம் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.

விழிப்புணர்வு

வெளிநாடுகளில் பிரபலமாகி உள்ள இந்த நடனம் இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இந்த ‘கிகி சேலஞ்ச்‘ நடனத்தில், பெங்களூருவில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதில் பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசார் கவனமாக உள்ளனர். இதுதொடர்பாக ஆடுகோடி போலீஸ் நிலைய டுவிட்டர் பக்கத்தில், ‘நாங்கள் ‘கிகிசேலஞ்ச்சை‘ கடுமையாக எதிர்க்கிறோம். ஏனென்றால், ‘கிகிசேலஞ்ச்‘ என்பது அதில் ஈடுபடும் நபருக்கும், சாலையில் செல்லும் பிறருடைய உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். வாகன சேதத்தையும் உருவாக்கும்‘ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து துணை போலீஸ் கமி‌ஷனர் அனுபம் அகர்வால் கூறுகையில், ‘பெங்களூருவில் ‘கிகி சேலஞ்ச்‘ நடனத்தில் யாரும் ஈடுபட்டதாக புகார்கள் வரவில்லை. இந்த வகையான நடனம் மக்களிடம் பரவுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘கிகிசேலஞ்ச்‘ நடனம் ஆடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது‘ என்றார்.

‘பிக்பாஸ்‘ போட்டியாளர் நிவேதிதாவின் நடனம்

‘கிகிசேலஞ்ச்‘ நடனத்தை தடுக்க பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ‘பிக்பாஸ்‘ போட்டியில் கலந்து கொண்ட நிவேதிதா தனது காரில் இருந்து கீழே இறங்கி ‘கிகிசேலஞ்ச்‘ நடனத்தில் ஈடுபட்டு அந்த வீடியோவை அவருடைய ‘இன்ஸ்ட்ராகிம்‘ பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதற்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Next Story