கொத்தனார் கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் தரகருக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
கொத்தனார் கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் தரகருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு,
சென்னை ஆதம்பாக்கம் காந்திநகர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் முருகன். ரியல் எஸ்டேட் தரகர். பீர்க்கங்கரணையை அடுத்த வெங்கம்பாக்கம் கக்கன்ஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 40). கொத்தனார்.
வெங்கம்பாக்கம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை முருகனும், பழனிவேலும் தனித்தனியாக விற்பனை செய்து வந்தனர். நாளடைவில் அவர்களுக்குள் தொழில்போட்டி ஏற்பட்டது. இதையடுத்து எப்படியாவது பழனிவேலை தீர்த்து கட்டி விட வேண்டும் என்று முருகன் எண்ணினார்.
கடந்த 31-8-2008 அன்று வெங்கம்பாக்கத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. கோவில் திருவிழாவுக்கு வெங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வரும்படி கொத்தனார் பழனிவேலை, முருகன் அழைத்தார். பழனிவேலும் அங்கு சென்றார். பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தனர். உறவினர்கள் அனைவரும் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்ட நிலையில் தொழில்ரீதியாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது முருகன், பழனிவேலை அடித்து உதைத்து சிமெண்டு கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்தார்.
இது குறித்து பீர்க்கங்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை குற்றத்திற்காக முருகனுக்கு ஆயுள் தண்டனையும். ரூ.2 ஆயிரம் அபராதமும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story