வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.10¼ லட்சம் மோசடி


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.10¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 2 Aug 2018 3:45 AM IST (Updated: 1 Aug 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.10¼ லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி,


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் கோவிந்தராஜ்(வயது28). பட்டதாரியான இவர், வேலைக்காக அலைந்து திரிந்துள்ளார். அப்போது, திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார்கோவில் தெருவை சேர்ந்த ராகேஷ்சர்மா என்பவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக தகவல் கிடைத்தது.

இதனால் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆர்வத்தில் திருச்சி வந்த கோவிந்தராஜ், ராகேஷ்சர்மாவை சந்திந்தார். அப்போது கோவிந்தராஜ் தனது விருப்பத்தை தெரிவித்து எப்படியாவது வேலை வாங்கி கொடுங்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஒப்புக்கொண்ட ராகேஷ்சர்மா, கத்தார் நாட்டில் வேலை இருக்கிறது. அங்கு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட், விசா முதலியன எடுக்க வேண்டும் என்றும், அதற்காக குறிப்பிட்ட தொகையை செலுத்த தயராக இருக்கிறீர்களா? என்றும் கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார்.


இதையடுத்து கோவிந்தராஜ், ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் வங்கி மூலமாக ராகேஷ்சர்மாவுக்கு 20.9.2016 முதல் 10.7.2018 வரை பல தவணைகளாக பணம் செலுத்தி உள்ளார். மொத்தம் ரூ.10 லட்சத்து 24 ஆயிரம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி பாஸ்போர்ட், விசா எதுவும் எடுத்து கொடுக்காமல் கத்தார் நாட்டில் வேலைக்கான எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையறிந்த கோவிந்தராஜ், ராகேஷ்சர்மாவை சந்தித்து கேட்டுள்ளார். வேலை இல்லாவிட்டால் தன்னுடைய பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுத்த ராகேஷ் சர்மாவும், அவருடைய மனைவி சங்கீதா, தந்தை கருப்பண்ணன் மற்றும் மாமா மனோகரன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கோவிந்தராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் கோவிந்தராஜ் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, திருச்சி மாநகர போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி ராகேஷ்சர்மா, சங்கீதா, கருப்பண்ணன், மனோகரன் ஆகிய 4 பேர் மீது மோசடி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்ப்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story