பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனர்


பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனர்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:30 AM IST (Updated: 1 Aug 2018 11:26 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனர். அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் தர்ணா மற்றும் வேலை நிறுத்தம் போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபடவுள்ளனர்.

பெரம்பலூர்,


மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் அர்சுனன் தலைமையில், டாக்டர்கள் நேற்று கோரிக்கை அட்டையை பேட்ஜ் ஆக அணிந்து பணி செய்தனர். இதில் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களும், காரை, கிருஷ்ணாபுரம், வேப்பூர் ஆகிய பகுதிகளில் தாலுகா அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களும், மாவட்டத்தில் உள்ள 40 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் என சுமார் 200 டாக்டர்கள் கோரிக்கை வாசகம் இடம்பெற்றிருந்த அட்டையை பேட்ஜ் ஆக அணிந்து பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் டாக்டர் ரமேஷ் கூறியதாவது:– மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் வரும் வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம். நாளை (வெள்ளிக்கிழமை) வரை கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிய உள்ளோம். மேலும் வருகிற 5–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் போராட்டம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி நிகழ்ச்சிகளும், துண்டு பிரசுரம் வினியோகமும் செய்யப்படவுள்ளது.

வருகிற 20–ந்தேதி தர்ணா போராட்டமும், 24–ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி கோரிக்கையை வலியுறுத்தி டாக்டர்கள் ஊர்வலம் நடைபெறவுள்ளது. 27–ந்தேதி பிரசவம், உள்நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தவிர மற்ற புறநோயாளிகள் சிகிச்சை, அவசரமில்லா அறுவை சிகிச்சை பணிகளில் டாக்டர்கள் ஈடுபடாமல் வேலை நிறுத்த போராட்டமும், செப்டம்பர் மாதம் 12–ந்தேதி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி ஊர்வலமும் நடத்தவுள்ளோம். அப்படியும் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லையென்றால் செப்டம்பர் 21–ந்தேதி எந்த வித சிகிச்சை பணிகளிலும் ஈடுபடாமல் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story