மண்எண்ணெய் வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம்


மண்எண்ணெய் வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:45 AM IST (Updated: 2 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே மண்எண்ணெய் வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள சேதுராஜபுரம் ஊராட்சி காசிலிங்காபுரத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 140–க்கும் மேற்பட்டோருக்கு ரே‌ஷன் பொருட்கள் வாங்குவதற்கான குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெய் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என கோரி 50–க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ரே‌ஷன் கார்டுடன் அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெண்கள் கூறும்போது, எங்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெய் கடந்த 2 வருடங்களாக வழங்கப்படவில்லை. ரே‌ஷன்கடை விற்பனையாளரிடம் கேட்டால் உரிய பதில் அளிக்காமல் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டு கொள்ளுங்கள் என்கிறார். ரே‌ஷன் கடையில் வழங்கப்படும் அரிசியும் தரமற்றதாக உள்ளது. தரமான அரிசிகளை எங்களுக்கு வழங்குவதில்லை. எனவே நாங்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளிக்க வந்தோம் என்றனர்.

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜகான் கூறும்போது, எங்களுக்கு 60 சதவீத அளவில் தான் மண்எண்ணெய் வழங்கப்படுகிறது. அதனை பிரித்து ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். அதனை அவர்கள் கியாஸ் சிலிண்டர்கள் இல்லாத வீடுகளுக்கு மட்டும் வழங்கி வருகின்றனர். மற்றவர்களுக்கு வழங்க மண்எண்ணெய் வழக்கப்படுவது இல்லை. போராட்டம் நடத்திய பகுதியில் ஒரு கியாஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்படவில்லை. இருந்தாலும் கிராமத்தில் பேசி வழங்கப்படும் மண்எண்ணெய் அனைவருக்கும் பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story