இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரத்தில் பதுக்கிய 5,600 டெட்டனேட்டர்களுடன் 7 பேர் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரத்தில் பதுக்கிய 5,600 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள நடராஜபுரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருப்பதாக குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பிரபு, தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமணன், குற்றப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் நவநீதம் மற்றும் போலீசார் நடராஜபுரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது இலங்கைக்கு கடத்துவதற்காக டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து 5,600 டெட்டனேட்டர்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக நேதாஜிநகர் பச்சமால் நாகேஷ் (வயது38), நடராஜபுரம் சுப்பிரமணியன், நம்புச்செல்வம்(40), முகமது முசாமில்(40), இந்திராநகர் மகாநிதி(23), தங்கச்சிமடம் ரவி(40), தேவிபட்டினம் மீரான்கனி ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த பல வருடங்களாக ராமேசுவரத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும், கடல் அட்டைகள், மருந்து பொருட்கள் தான் கடத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது பெரிய அளவில் வெடிபொருட்கள் பிடிபட்டுஉள்ளது புலனாய்வு துறையினரை அதிர்ச்சிக்குஉள்ளாக்கி உள்ளது.
இதேபோல வேறு எங்கும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும், கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர்கள் எங்கு வாங்கப்பட்டது, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.