ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் அகற்றம்


ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் அகற்றம்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:30 AM IST (Updated: 2 Aug 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன. மேலும் சுகாதாரத்தை பேணாத 4 கடைகளுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பழைய அக்ரஹாரம் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பழைய இரும்பு, பாட்டில் உள்ளிட்டவற்றை வாங்கி, விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்களை ஏற்ற, இறக்க வரும் சரக்கு வாகனங்களால் அப்பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவிகள் சென்று, வருவதில் இடையூறு ஏற்பட்டது. மேலும் பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளின் பொருட்கள், முன்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் தூய்மை பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக அங்கு ஒருபுறம் குப்பைகள் குவிந்தும், மறுபுறம் பொருட்கள் ஆக்கிரமிப்பிலும் கிடந்தன. இதனால் அப்பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசி வந்தது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று முன்தினம் ஊட்டி மத்திய பஸ் நிலையம், லோயர் பஜார் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஊட்டியில் நகராட்சிக்கு சொந்தமான நடைபாதைகள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள கடைகளை அகற்ற அவர் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் ஊட்டி நகராட்சி கமி‌ஷனர்(பொறுப்பு) ரவி தலைமையில் சுகாதார அதிகாரி டாக்டர் முரளி சங்கர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள கடைகளின் பொருட்கள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளதை நேற்று பார்வையிட்டனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் கடைக்குள் பொருட்களை வைக்க வேண்டும் என்றும், சாலையில் தாறுமாறாக பொருட்களை குவித்து வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். சில கடைகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிற கடைகளின் இரும்பு பொருட்கள் நகராட்சி வாகனங்களில் ஏற்றப்பட்டு அகற்றப்பட்டன. அப்பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்காமல் செயல்பட்டு வந்த 4 கடைகளுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஊட்டியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நடைபாதைகளை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படும் வகையில் கடைகள் போடக்கூடாது. கடைக்கு வெளியே பொருட்களை வைக்கக்கூடாது. இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.


Next Story