ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று கலெக்டர் மலர்விழி ஆய்வு


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று கலெக்டர் மலர்விழி ஆய்வு
x
தினத்தந்தி 1 Aug 2018 10:45 PM GMT (Updated: 1 Aug 2018 7:36 PM GMT)

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர், ஆற்றில் பரிசல் இயக்க ஓரிரு நாளில் அனுமதி அளிக்கப்படும், என்றார்.

பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பின. இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த மாதம் 10-ந் தேதி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து 22-ந் தேதி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று 24-வது நாளாக நீடித்தது.

இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து பரிசல் இயக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் அதிகாரிகள் ஒகேனக்கல் கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு பகுதி வரை பரிசலில் சென்று ஆய்வு செய்தனர். ஒரு பரிசலில் கலெக்டர் மலர்விழி மற்றும் அதிகாரிகளும், மேலும் 2 பரிசல்களில் மற்ற அதிகாரிகளும் சென்றனர்.

ஆய்வுக்கு பின்னர் கலெக்டரிடம், பரிசல் ஓட்டிகள் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி, அதிகாரிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் பரிசல் இயக்க அனுமதிக்கப்படும், என தெரிவித்தார். அதன்பின்னர் ஆடிப்பெருக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் சிவனருள், பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், தாசில்தார் அழகுசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மாரி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் பேருராட்சி தலைவர் சுப்பிரமணியன், கூத்தபாடி ஊராட்சி முன்னாள் தலைவர் ரவி, பரிசல் ஓட்டிகள் சங்க தலைவர்கள் கெம்புராஜ், பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story