திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிபோன மதுரை–தொண்டி சாலை


திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிபோன மதுரை–தொண்டி சாலை
x
தினத்தந்தி 2 Aug 2018 3:30 AM IST (Updated: 2 Aug 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் வழியாக செல்லும் மதுரை–தொண்டி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போய்விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சந்தை திடல் பகுதியில் இருந்து சிவகங்கைக்கு பிரிந்து மாநில நெடுஞ்சாலை செல்கிறது. சாலையின் மேல்புறம் முகப்பில் போலீஸ் சோதனை சாவடி, மினிவேன் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன. சாலையின் கீழ்புறம் பேரூராட்சி கழிவுநீர் செல்லும் கால்வாய் அருகில் வீடுகள், வர்த்தக கடைகள் ஏராளம் உள்ளன. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து திருப்புவனம்–சிவகங்கை, திருப்புவனம்–மேலூர் இடையே பஸ் வழித்தடம் உள்ளது. மேலும் வடகரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அங்காடிமங்கலம் வரையிலும், இதேபோல் மடப்புரம், தேளி, ஏனாதி, பாப்பாகுடி, கணக்கன்குடி, பெத்தானேந்தல், மணல்மேடு, கருங்குளம் வரை பொதுமக்கள் இந்த வழித்தடம் செல்கிறது.

முன்பு இந்த சாலையின் அகலம் வெறும் 20 அடியாகவே இருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி இருந்துவந்தது. இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை, தமிழக அரசின் நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் மதுரை–திருப்புவனம்–தொண்டி தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலையின் ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து வாகனங்கள் எந்தவித தடையும் இன்றி சென்றுவந்தன. மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் முகப்பில் மட்டும் அந்த சாலை 100 அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. இதனால் தினசரி போக்குவரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. சாலையோர கழிவுநீர் கால்வாய்களை தாண்டி, கடையின் முன்புள்ள சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டியும், மணலை கொட்டியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 15 முதல் 20 அடி வரை சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீரும், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. ஆக்கிரமிப்பால் கழிவுநீர் கால்வாய்க்குள் மழைநீர் செல்ல வழியில்லாமல் போய்விட்டது. இதற்கிடையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் வாரச்சந்தையின்போது சாலை ஆக்கிரமிப்பால் கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story