கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை அமலுக்கு வந்தது


கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 1 Aug 2018 10:15 PM GMT (Updated: 1 Aug 2018 8:21 PM GMT)

கரூர் மாவட்ட அரசு அலுவலகங் களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கான தடை அமலுக்கு வந்தது.

கரூர்,

தமிழகத்தில் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடும் நோக்கில் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல், ஒருமுறையே பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்படும் என சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் முன்னோட்டமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் நேற்று முதல் பிளாஸ்டிக் பொருட்களான (தடிமன் வேறுபாடின்றி) பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் மேஜை விரிப்புகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.

அந்த பொருட்களுக்கு மாற்றாக வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள், காகித தாள்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடி குவளைகள், காகித உறிஞ்சு குழல், துணிப்பைகள், காகித மற்றும் சணல் பைகள், துணி காகித கொடிகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் மனுக்களை கொண்டு வந்தால் அந்த பிளாஸ்டிக் பைகளை வாங்கி அப்புறப்படுத்தி, அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு, பிளாஸ்டிக் தடை குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. 

Next Story