மருத்துவ மாணவர்களுக்கு ஒழுக்கம் அவசியம் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் பேச்சு


மருத்துவ மாணவர்களுக்கு ஒழுக்கம் அவசியம் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் பேச்சு
x
தினத்தந்தி 2 Aug 2018 3:30 AM IST (Updated: 2 Aug 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஒழுக்கம் அவசிமானது என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தெரிவித்து உள்ளார்

நெல்லை,

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஒழுக்கம் அவசிமானது என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தெரிவித்து உள்ளார்.

வரவேற்பு நிகழ்ச்சி

நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு சேர்ந்து உள்ள மாணவர்கள் நேற்று கல்லூரிக்கு வந்தனர். அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி தளிர் என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. முதலாமாண்டு மாணவ–மாணவிகளுக்கு, இறுதியாண்டு படிக்கும் மாணவ–மாணவிகள் பூ கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் நடந்த விழாவுக்கு டீன் கண்ணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் டாக்டர் ரேவதி வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நானும் எம்.பி.பி.எஸ். டாக்டர் தான். அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்த பணிக்கு வந்து உள்ளேன். உலகத்திலேயே சிறந்த பணி மருத்துவ பணியாகும். நீங்கள் டாக்டராக வேண்டும் என்பதற்காக உங்கள் பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் பல தியாகங்களை செய்து இருக்கலாம். இது வரை நீங்கள் எப்படி இருந்தாலும் இனி பொறுப்பு உள்ளவர்களாக இருக்கவேண்டும். பிற பணிக்கு ஓய்வு உண்டு. மருத்துவ சேவைக்கு ஓய்வு கிடையாது. 80 வயதானவர்கள் கூட மருத்துவ சேவை செய்து வருகிறார்கள்.

ஒழுக்கம் மிக அவசிமானது

நான் தூத்துக்குடியில் பணியில் இருந்தபோது இரவு வாகன சோதனையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தனர். அவர்களிடம் நான் பிறரின் உடல்நலத்தை பேணக்கூடிய நீங்கள் மதுவை குடித்து உடலை கெடுக்கலாமா? என்று கேட்டேன். அவர்கள் தலை கவிழ்ந்து நின்றனர். நான் மருத்துவ படித்தவன் என்ற முறையில் கூறுகிறேன், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக அவசியமானதாகும்.

எனவே நீங்கள் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் ஒழுக்கத்துடன் கல்வி கற்று சிறந்த மருத்துவ நிபுணராக வரவேண்டும். நீங்கள் மருத்துவ பணியில் உயர்ந்த நிலைக்கு வரும் போது உங்கள் பெற்றோரையும், ஆசிரியரையும் மறக்கக்கூடாது. அப்போது தான் உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மருத்துவ பாடப்பிரிவுகள்

டீன் கண்ணன் பேசுகையில், நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் புதிய மருத்துவ பாடப்பிரிவுகளை தொடங்க விண்ணப்பித்து உள்ளோம். ஆராய்ச்சித்துறையில் 3 பிரிவுகளும், 4 சிறப்பு மருத்துவ பிரிவுகளும், மருத்துவம் சார்ந்த 10 துணை மருத்துவ படிப்புகளும் தொடங்க விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும். மாணவர்கள் புதிய சட்டத்தின் படி ஆடைகள் அணிந்து வரவேண்டும். நடை, உடை பாவணை மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியம். இதை கருத்தில் கொண்டு மாணவ–மாணவிகள் படித்து கல்லூரிக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்றார்.

விழாவில் டாக்டர்கள் வரதராஜன், ராமானுஜம், ஜெயந்தி, சாரதா, ராடலட்சுமி, ஏழில்ரம்யா, கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணலீலா, செல்வராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவ–மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.


Next Story