மீன்சுருட்டி அருகே காரில் கடத்தி வந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது


மீன்சுருட்டி அருகே காரில் கடத்தி வந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2018 4:30 AM IST (Updated: 2 Aug 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே காரில் கடத்தி வந்த 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன்சுருட்டி,


அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள அணைக்கரையில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, சப்–இன்ஸ்பெக்டர்கள் வசந்த், திவாகர் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணைக்கரை பாலத்தில் ஒரு வழி சாலை என்பதால், சென்னை வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி, எதிரே வரும் வாகனங்களை அனுப்பிய பிறகு இந்த வாகனங்களை அனுப்புவது வழக்கம். இதையடுத்து சென்னையில் இருந்து வந்த கார் ஒன்றை போலீசார் ஓரமாக நிறுத்த சொல்லி உள்ளனர். போலீசாரை பார்த்ததும் கார் டிரைவர் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.


இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் காரின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது காரில் ஒருவர் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே காரை சோதனை செய்த போது காரில் கஞ்சா பொட்டலங்கள் மூட்டையா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரையும், காரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் மதுரை இடையாப்பட்டி குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சங்கர் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்து கஞ்சா மூட்டைகளை பிரித்து பார்த்த போது ஒவ்வொரு பாக்கெட்டும் 2 கிலோ எடை கொண்டதாகவும், 250 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு கோடி கணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் இருந்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story