நெல்லை பல்கலை. கல்லூரிகள்–உறுப்பு கல்லூரிகள் பட்டமளிப்பு விழா: 1,250 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் பாஸ்கர் வழங்கினார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பல்கலை.கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் 1,250 மாணவ–மாணவிகளுக்கு துணைவேந்தர் பாஸ்கர் பட்டம் வழங்கினார்.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பல்கலை.கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் 1,250 மாணவ–மாணவிகளுக்கு துணைவேந்தர் பாஸ்கர் பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் அரங்கில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பயின்ற மாணவ–மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு வரவேற்று பேசினார்.
துணைவேந்தர் பேச்சு
விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி, 1,250 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் துணை வேந்தர் பேசுகையில்,‘ நமது நாட்டில் அதிக அளவில் மாணவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர். ஆனால் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் மாணவர்களிடம் குறைந்து வருகிறது. மாணவர்கள் பட்டம் பெறுவதுடன், தங்களின் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். நமக்கு தமிழ் எவ்வளவு அவசியமோ, அதே போன்று ஆங்கிலமும் அவசியம். அப்போது தான் பல்திறன்களை மாணவர்கள் பெற்று வாழ்க்கையில் சாதிக்க முடியும், என்றார்.
புதிய தொழில்நுட்பங்களை...
திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில்,‘ நாட்டில் நீடித்த மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை ஏற்படுத்த தரமான கல்வி அவசியம். உலகளவில் உயர்கல்விக்கான தரம் மாறுபட்டு வருகிறது. எனவே, மாணவர்கள் பல்வேறு துறைகள் சார்ந்த அறிவையும், திறனையும் வளர்த்து கொள்ள வேண்டும். பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் உருவாக்க வேண்டும். பெண்கள் மேம்பாடு என்பது, அவர்களுக்கு வாய்ப்பளிப்பது மட்டுமல்லாமல், அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதாகும், என்றார்.
விழாவில் பல்கலைக்கழக தேர்வாணையர் சுருளியாண்டி, பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகள் இயக்குனர் ரவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story