ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏரல்,
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேர்மன் அருணாசலசாமி கோவில்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணசாலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பழைய காயலில் இருந்து சங்குமுக தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றினார்.
தொடர்ந்து தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி கேடய சப்பரத்தில் அருணாசலசாமி திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9–ம் திருநாள் வரையிலும் தினமும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் இரவில் வில்லிசை, பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
11–ந் தேதி, ஆடி அமாவாசை10–ம் திருநாளான வருகிற 11–ந் தேதி (சனிக்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 10 மணிக்கு 1–ம் காலம் கற்பகப்பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.
11–ம் திருநாளான 12–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 2–ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு 3–ம் காலம் பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி, திருக்கற்பூர தீப தரிசனம் நடக்கிறது.
12–ம் திருநாளான 13–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தீர்த்தவாரி தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மதியம் 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.