சிலை திருடப்பட்டதாக பொய் புகார்; கைதானவர்களை விடுவிக்க வேண்டும், 300-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு


சிலை திருடப்பட்டதாக பொய் புகார்; கைதானவர்களை விடுவிக்க வேண்டும், 300-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 3 Aug 2018 4:15 AM IST (Updated: 3 Aug 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளோடு ராசா சாமி கோவிலில் சிலை திருடப்பட்டதாக பொய் புகார் கொடுக்கப்பட்டு கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்று 300-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

தென்முகம் வெள்ளோடு சாத்தந்தைகுலம் ராசா சுவாமி நற்பணி மன்றத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கிட்டுசாமி தலைமையில் மணி கவுண்டர், அருணாச்சலம், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

தென்முகம் வெள்ளோட்டில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராசா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து கடந்த 1987-ம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்தது. பின்னர் உலகபுரம், கனகபுரம், தேவபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமானவர்கள் தென்முகம் வெள்ளோடு ராசா சுவாமி நற்பணி மன்றத்தை தொடங்கி அதன் மூலம் கோவிலை நிர்வகித்து வந்தனர்.

கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாலும், கோவிலின் பெரும்பகுதி அரசு நெடுஞ்சாலை துறைக்கு சேர்ந்த இடத்தில் இருந்ததாலும் நற்பணி மன்றம் மூலம் புதிய கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்காக கோவில் அருகே நிலம் ஒதுக்கப்பட்டு அங்கு புதிய கற்கோவில் கட்டப்பட்டது.

பின்னர் கும்பாபிஷேகத்தின் போது இந்து அறநிலையத்துறையின் முன்னிலையில் பழைய கோவிலில் நல்ல நிலையில் இருந்த கற்சிலைகள் புதிய கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சிதிலம் அடைந்த மற்ற கற்சிலைகள் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் பழைய கோவிலில் உள்ளது.

இந்த நிலையில் ஒரு சிலர் வேண்டும் என்றே இங்குள்ள கோவிலில் உள்ள சிலைகள் திருடப்பட்டதாக பொய்யாக புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் எங்கள் குலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர். இது பொய்யான புகார் ஆகும்.

எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு கைதானவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோவிலில் சிலைகள் எதுவும் திருட்டுபோகவில்லை. இதுகுறித்து தாங்கள் நேரடியாக ஆய்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

Next Story