கொல்லிமலை வல்வில் ஓரிவிழாவில் ரூ.2.81 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


கொல்லிமலை வல்வில் ஓரிவிழாவில் ரூ.2.81 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:15 AM IST (Updated: 3 Aug 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் நேற்று நடைபெற்ற வல்வில் ஓரி விழாவில் ரூ.2 கோடியே 81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி மன்னருக்கு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கொல்லிமலை செம்மேடு வல்வில்ஓரி அரங்கில் வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா, வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பல்துறை பணிவிளக்க முகாம் கண்காட்சியை திறந்து வைத்து, வல்வில்ஓரி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:-

கொல்லிமலை பின்தங்கிய வட்டாரமாக இருப்பதால், அரசு தனிக்கவனம் செலுத்தி நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மலைவாழ் மக்களுக்கு தேவையான சாதிச்சான்றிதழ் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா தலமாக விளங்கும் கொல்லிமலைக்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதை கருத்தில் கொண்டு ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் படிகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு வசதிகளை சுற்றுலாத்துறை சார்பில் செயல்படுத்த இருக்கிறோம்.

இடைநிரவல் நிதி மூலம் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து திட்டங்களையும் செய்து வருகிறது. இங்கு அரசின் திட்டங்களை எவ்வாறு பெறுவது மற்றும் அதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி அரங்குகளை கொல்லிமலை மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 1,197 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 81 லட்சத்து 67 ஆயிரத்து 826 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறைகளை ஒருங்கிணைத்து வைக்கப்பட்டு இருந்த பணிவிளக்க கண்காட்சியினை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். தோட்டக்கலை துறை சார்பில் பழங்களால் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இவ்விழாவை முன்னிட்டு சேலம் மண்டல கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை, பள்ளிகல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்த விழாவில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) டாக்டர் மணி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) பாலமுருகன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) துரை, மாவட்ட வழங்கல் அலுவலர் பர்ஹத்பேகம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் கண்ணன், சுற்றுலா அலுவலர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், கொல்லிமலை முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி அண்ணாதுரை உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story