பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ-வேன்கள் 7-ந்தேதி ஓடாது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு


பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ-வேன்கள் 7-ந்தேதி ஓடாது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2018 3:27 AM IST (Updated: 3 Aug 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி புதுவையில் பள்ளிக்கூட மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, வேன்கள் 7-ந்தேதி ஓடாது என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதுச்சேரி,

புதுவை ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில தலைவர் அபிசேகம், செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பதவிக்கு வந்தவுடன் கடந்த 2014-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் 1988-க்கு பதில் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா என்ற புதிய சட்டத்தை கொண்டுவர முயன்றது. நாடு தழுவிய எதிர்ப்பு காரணமாக பின்வாங்கிய மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவரும் முடிவினை கைவிட்டது. ஆனால் தற்போதுள்ள மோட்டார் வாகன சட்டத்தில் 71 திருத்தங்களை செய்தும், 18 புதிய பிரிவுகளை சேர்த்தும் பாராளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது.

நாடாளுமன்ற மேலவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதா நிறைவேறுவது தாமதமாகி வருகிறது. ஆனால் மத்திய அரசு எப்படியாவது சட்ட திருத்தத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இச்சட்ட திருத்தத்தின் மூலம் வாகன பதிவு, தகுதி சான்றிதழ் வழங்குவது அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். வாகனங்களை குறிப்பிட்ட காலம் மட்டுமே ஓட்டவேண்டும். பெர்மிட் வழங்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறித்துவிட்டு தனியார் கம்பெனி முதலாளிகளிடம் வழங்க இந்த சட்டம் வழி செய்கிறது.

இந்த சட்டதிருத்தம் ஓட்டுனர் உரிமம் வழங்கும் உரிமை பெருநிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு லட்சக்கணக்கான ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை மூடும் ஆபத்தை உருவாக்கி உள்ளது. மோட்டார் தொழில் முழுவதையும் பெரிய நிறுவனங்களுக்கு என மாற்ற மத்திய அரசு துடிக்கிறது. மோட்டார் தொழிலாளியின் வாழ்வும், எதிர்காலமும் கேள்விக்குறியாக மாற்றப்பட்டு விட்டது.

பயணிகள் பஸ், ஆட்டோ, லாரி, டாக்சி, சிறிய சரக்கு வாகனம், வேன், கன்டெய்னர், ஒர்க்‌ஷாப் தொழிலாளிகள் என சுமார் 4 கோடி பேர் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

எனவே மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 7-ந்தேதி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் பஸ், ஆட்டோ தொழிலாளர்கள், உதிரி பொருட்கள் விற்பனை கடை வைத்திருப்போர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கின்றனர். இதனால் அன்றைய தினம் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வேன், ஆட்டோ என எந்த வாகனங்களும் இயங்காது. காலை 9 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து புதிய பஸ் நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பேட்டியின்போது ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த குமார், முத்துராமன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த அண்ணா அடைக்கலம், சி.ஐ.டி.யு. சீனுவாசன் உள்பட பல்வேறு தொழிற்சங்களை சேர்ந்த நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Next Story