மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆசாமி கைது
தாராபுரம் அருகே மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட ஆசாமி கைது செய்யப்பட்டார். இவர் மீது 65 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தாராபுரம்,
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-குண்டடம் ரோட்டில் உள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவர் சூரியநல்லூர் மின்வாரிய துணை மின்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
அங்கு 2 நாட்கள் இருந்து விட்டு அதன் பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசில் செல்வராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடிவந்தனர். இந்த நிலையில் குண்டடம் அருகே உள்ள சங்கபாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் 2 சிறிய கத்திகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவரது பெயர் சதீஷ்குமார் (30) என்பதும், சென்னை நெசப்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் என்பதும், மின் வாரிய அதிகாரி செல்வராஜ் வீட்டில் பூட்டை உடைத்து நகை திருடியவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே உடுமலை, கோவை, நீலகிரி, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களில் பூட்டை உடைத்து நகை திருடியதாக 65 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை தனிப்படை போலீசார் கைதுசெய்து தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்களில் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சசிக்குமார் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story