திருச்செந்தூரில் பட்டப்பகலில் துணிகரம் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை–பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


திருச்செந்தூரில் பட்டப்பகலில் துணிகரம் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை–பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Aug 2018 3:15 AM IST (Updated: 4 Aug 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் பட்டப்பகலில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை–பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் பட்டப்பகலில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை–பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ராஜ்கண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜையா மகன் ஸ்டீபன் பாக்கியராஜ் (வயது 45). இவர் திருச்செந்தூரில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராமலட்சுமி (38). இவர் விளாத்திகுளம் அருகே புதூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு லோகேஷ் ராஜ் (8) என்ற மகனும், அத்விகா (1½) என்ற மகளும் உள்ளனர்.

ராமலட்சுமி தன்னுடைய குழந்தைகளுடன் புதூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஸ்டீபன் பாக்கியராஜ் அடிக்கடி புதூருக்கு சென்று, தன்னுடைய மனைவி, குழந்தைகளை பார்த்து வந்தார். நேற்று காலையில் ஸ்டீபன் பாக்கியராஜ் வழக்கம்போல் தனது வீட்டை பூட்டி விட்டு, அலுவலகத்துக்கு சென்றார்.

நகை–பணம் திருட்டு

ஸ்டீபன் பாக்கியராஜின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த 2 பீரோக்களையும் உடைத்து, அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ.56 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த ஸ்டீபன் பாக்கியராஜ் தனது வீட்டின் கதவு, பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததையும், நகைகள், பணம் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பேக்கரி உரிமையாளர்

அதே பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் மணி (42). இவர் உடன்குடியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு, திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவில் உள்ளது. அந்த தெருவில் உள்ள கோவிலில் கொடை விழா நடைபெறுவதால், மணி தன்னுடைய குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களாக அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

எனவே ராஜ்கண்ணா நகரில் உள்ள மணியின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

நேற்று மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த மணி தனது வீட்டின் முன்பக்க கதவு, பீரோ உடைக்கப்பட்டு, பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். திருட்டு நடந்த ஸ்டீபன் பாக்கியராஜ், மணி ஆகியோரது வீடுகள் அடுத்தடுத்து உள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் அடுத்தடுத்த வீடுகளின் கதவுகளை உடைத்து, நகைகள், பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story