குளத்தில் மணல் எடுத்ததில் தகராறு: இருதரப்பினர் இடையே மோதல்


குளத்தில் மணல் எடுத்ததில் தகராறு: இருதரப்பினர் இடையே மோதல்
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 4 Aug 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே குளத்தில் மணல் எடுத்ததில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குத்தாலம், 


நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் சவுரிராஜன் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 62). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தரங்கம்பாடி வட்ட செயலாளராக உள்ளார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த சம்பந்தம் மகன் இளையராஜா (34) என்பவர், சீனிவாசனின் வீட்டின் அருகில் ஒரு குளத்தில் அனுமதியின்றி 25 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுத்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் இளையராஜா மீது சீனிவாசன் புகார் செய்தார். அதன்பேரில் மணல் எடுத்த தரப்பினரையும், சீனிவாசன் தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த 1-ந் தேதி மேற்கண்ட குளத்தில் பொக்லின் எந்திரம் மூலம் மணல் எடுப்பதாக சீனிவாசனுக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து சீனிவாசன், தனது ஆதரவாளர்கள் சிலருடன் சென்று குளத்தில் மணல் அள்ளக்கூடாது என்று தடுத்து நிறுத்தி, பொக்லின் எந்திரத்தின் சாவியையும் பறித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு மணல் எடுத்த இளையராஜாவின் மனைவி கனிமொழி, இவரின் சகோதரிகள் வினோதினி, அஸ்வினி, நளாயினி ஆகியோர் அங்கு சென்று பொக்லின் எந்திரத்தின் சாவியை, சீனிவாசன் தரப்பினரிடம் கேட்டனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சீனிவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து கனிமொழி, வினோதினி, அஸ்வினி, நளாயினி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த இளையராஜா அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் ஆகிய 2 பேரும் சேர்ந்து சீனிவாசன் வீட்டிற்கு சென்று அவரது மனைவியையும், 2 மகன்களையும் உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார் இளையராஜா, அரவிந்த் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார், சீனிவாசன், அவரது மகன்கள் தீபன்கோஸ், கோஸ்மின், ஆதரவாளர்கள் அதே பகுதியை சேர்ந்த சந்திரமோகன், பஷீர்அகமது, சாமிதுரை உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story