வெளி மாநில தொழிலாளர்களின் முழு விவரம் பதிவு செய்ய வேண்டும், போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை


வெளி மாநில தொழிலாளர்களின் முழு விவரம் பதிவு செய்ய வேண்டும், போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2018 3:45 AM IST (Updated: 4 Aug 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநிலத்தவரின் முழு விபரங்களை போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தை பொருத்த மட்டில் பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட ஆலைகள் மற்றும் நூற்பு, சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில்வேலை வாய்ப்புகள் இருந்து வரும் நிலையில் இம்மாவட்ட இளைஞர்களைவிட வெளி மாநிலத்தவர் இங்கு வேலை வாய்ப்பு பெறுவது அதிகரித்து விட்டது. குறிப்பாக பீகார், மத்திய பிரதேம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உடலுழைப்பு தொழிலாளர்கள் இம்மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர். சிறு உணவு விடுதிகளில் கூட வெளிமாநிலத்தவர் வேலை பார்ப்பதை பார்க்க முடிகிறது. இதில் 30 சதவீதம் பேர் மட்டுமே குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் மற்றவர்கள் தனியாகவே வசித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இம்மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் வெளி மாநிலத்தவரின் முழு விபரங்களை அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் இதன்படி வெளிமாநிலத்தவரின் விபரங்கள் போலீஸ் நிலையங்களில் முழுமையாக பதிவு செய்யப்படாத நிலையே நீடிக்கிறது. தொழிற்சாலை நிர்வாகங்களும் இந்த நடைமுறையை பின்பற்ற அக்கறை காட்டாத நிலையில் போலீஸ் நிலைய அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்தவில்லை.

இதனால் விபத்துக்களிலோ குற்ற நிகழ்வுகளிலோ வெளி மாநிலத்தவர் சிக்கும்போது அவர்களை பற்றிய எந்த முழு விபரமும் தெரிய போலீசாரால் இயலாத நிலை ஏற்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளை தனியார் நிறுவனங்களுக்காக வெளிமாநிலத்தவர் செய்து வரும் போது அவர்கள் விபத்துக்களில் சிக்கி இறக்கும் போது அவர்களது உறவினர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் அருகே ஒரு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் தொடர்புடைய வெளி மாநிலத்தவரின் முழு விபரமும் கிடைக்காததால் அவரை கைது செய்ய முடியவில்லை. இதே போன்று பல நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது சிவகாசி அருகே தி.மு.க. பிரமுகர் கொலையுண்ட வழக்கிலும் தொடர்புடையவர் என கூறப்படும் அசாம் மாநிலத்தை சோந்தவர்களையும் தேடி கண்டுப்பிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களை பற்றி முழு விபரங்களை பதிவு செய்யப்பட்டு இருந்தால் அவர்களை தேடி கண்டுபிடிப்பதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை.

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இம்மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநிலத்தவரின் முழு விபரங்களை போலீஸ் நிலையங்களில் பதிவு செய்வதோடு, தனியாக பல்வேறு வணிக நோக்கோடு வெளி மாநில இளைஞர்களின் விபரங்களை போலீசார் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்படுகிறது.


Next Story