மங்கலம் அருகே கத்தி முனையில் பனியன் நிறுவன ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல், 5 பேர் கைது
மங்கலம் அருகே பனியன் நிறுவன ஒப்பந்ததாரரை கத்தி முனையில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மங்கலம்,
திருப்பூரை அடுத்த மங்கலம் இடுவாயை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் பல்லடம் அருள்புரத்தில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது காரில் மங்கலம் அருகே சின்னகாளிபாளையம் நால்ரோட்டில் இருந்து 63 வேலம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய காருக்கு முன்னால் ஒருகாரும், பின்னால் ஒரு காரும் வந்து கொண்டிருந்தது.
இதற்கிடையில் அந்த சாலையில் மணிகண்டனிடம் ஏற்கனவே வேலை பார்த்த இடுவாய் ராஜகணபதி நகரை சேர்ந்த அருண்குமார் உள்பட 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் மணிகண்டனின் காரை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். மணிகண்டனுக்கு, அருண்குமாரை ஏற்கனவே தெரியும் என்பதால் காரை நிறுத்தினார். இதையடுத்து காரின் முன்பக்க கதவை திறந்து கொண்டு அருண்குமாரும், பின் பக்க கதவை திறந்து கொண்டு அவருடன் வந்த வாலிபரும் ஏறிக்கொண்டனர்.
கார் சிறிது தூரம் சென்றதும், முன் இருக்கையில் இருந்த அருண்குமாரும், பின் இருக்கையில் அமர்ந்து இருந்த வாலிபரும் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மணிகண்டன் கழுத்தில் வைத்து ‘‘ ரூ.5 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவோம், இல்லை என்றால் கொலை செய்து விடுவோம்’’ என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன மணிகண்டன் செய்வது அறியாமல் திகைத்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார்.
உடனே மணிகண்டன் கார் கண்ணாடியை திறந்து ‘‘ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று கூச்சல் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதிர்ச்சியடைந்து, அந்த காரை விரட்டி சென்று காரை நிறுத்துமாறு கூறினார். இதையடுத்து காரை மணிகண்டன் நிறுத்தியதும், கார் சாவியை மோட்டார் சைக்கிளில் வந்தவர் எடுத்துக்கொண்டார். அப்போது மணிகண்டன் கழுத்தில் காயம் இருந்தது. இதனால் மாட்டிக்கொண்டோம் பயந்துபோன அருண்குமார் காரை விட்டு இறங்கி முன்னால் சென்று கொண்டிருந்த காரிலும், பின் இருக்கையில் இருந்த வாலிபர் பின்னால் வந்த ஒரு காரிலும் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் மங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பி.முத்துசாமி மேற்பார்வையில் மங்கலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் என்.முத்துசாமி தலைமையில் ஒரு தனிப்படையும், மங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரோஜினி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று காலையில் பூமலூர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் இருந்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.
விசாரணையில் அவர்கள் இடுவாயை சேர்ந்த அருண்குமார் (28), கருவம்பாளையத்தை சேர்ந்த நரி என்கிற மணிகண்டன் (24), சுல்தான்பேட்டை அறிவொளிநகரை சேர்ந்த வீரபிரவீன்குமார் (20), திருப்பூர் பகவதிநகர் செல்லம்நகரை சேர்ந்த நித்யானந்தன் (29) மற்றும் இடுவாய் மாருதிநகரை சேர்ந்த வினோத்குமார் (29) என்றும், இவர்கள் 5 பேரும் சேர்ந்து மணிகண்டனை கடத்தி சென்று கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் அருண்குமார் ஏற்கனவே மணிகண்டனிடம் வேலை பார்த்ததும், தற்போது அவருக்கு பணப்பிரச்சினை இருந்துள்ளதால் மணிகண்டனை கடத்தி சென்று மிரட்டினால் பணம் கொடுத்துவிடுவார் என்றும் திட்டம் போட்டுள்ளார். இந்த திட்டத்தை தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்களும் திட்டத்திற்கு ஒத்துக்கொண்டனர். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் மணிகண்டன் காரில் எங்கெங்கு செல்கிறார் என்றுகண்காணித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் காரில் சென்ற மணிகண்டனை பின்தொடர்ந்து ஒரு காரிலும், அவருடைய காருக்கு முன்னால் ஒரு காரிலும் சென்று உள்ளனர்.
அருண்குமாரும், நரி என்ற மணிகண்டனும் மோட்டார் சைக்கிளில் சென்று ஒப்பந்ததாரர் மணிகண்டன் காரை வழிமறித்து லிப்ட் கேட்பது போல் நடித்து, கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்ததால் இவர்களுடைய திட்டம் தவிடுபொடியாகி போலீசில் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 2 கார்களும், 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பனியன் நிறுவன ஒப்பந்ததாரரை சினிமா பாணியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.