வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.30 அடியாக உயர்வு: நீரேற்று நிலையம், ராட்சத குழாய்கள் சுத்தப்படுத்தும் பணி


வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.30 அடியாக உயர்வு: நீரேற்று நிலையம், ராட்சத குழாய்கள் சுத்தப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 4 Aug 2018 4:01 AM IST (Updated: 4 Aug 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.30 அடியாக உயர்ந்துள்ளதால் நீரேற்று நிலையம், ராட்சத குழாய்கள் சுத்தப்படுத்தும் பணியை மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒரு வாரத்தில் சென்னைக்கு குடிநீர் அனுப

சேத்தியாத்தோப்பு,




மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ந்தேதி காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதியான கீழணைக்கு வந்தது. கீழணை 9 அடியை எட்டியதை அடுத்து, கடந்த 26-ந் தேதி வடவாறு வழியாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது.

கீழணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர், வீராணம் ஏரியை கடந்த 27-ந் தேதி காலை 7 மணிக்கு வந்தது. அன்று முதல் வீராணம் ஏரிக்கு தொடர்ந்து அதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 43.30 அடியை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வீராணம் ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரி நிரம்பி வருவதால் விவசாய பாசனத்துக்காக 34 மதகுகள் வழியாக விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வீராணம் ஏரிக்கு உள்ளது. இதற்காக வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைப்பதற்காக சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நீரேற்று நிலையத்தை கடந்த 30-ந் தேதி தண்ணீர் தொட்டது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி நீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக ராட்சத குழாய்கள், மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நீரேற்று நிலைய குழிகள், குழாய்கள் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இந்த பணியை சென்னை மெட்ரோ குடிநீர் செயல் இயக்குனர் பிரபுசங்கர், உதவி பொறியாளர்கள் அருண்குமார், விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து மெட்ரோ குடிநீர் அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. ஏரி தண்ணீரின்றி வறண்டதால் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வாலாஜா ஏரிக்கு வருகிறது. அந்த தண்ணீரை சுத்திகரித்து, சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வருவதால், இங்குள்ள நீரேற்று நிலையம் மூலம் ஒரு வாரத்தில் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். இதற்கான ஏறுபாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

Next Story