8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2018 10:07 AM IST (Updated: 4 Aug 2018 10:07 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

சேலம்- சென்னை இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிரைசாமேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராஜன், மாதர்சங்க மாவட்ட நிர்வாகி பூபதி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

விவசாய விளைநிலங்களை பாதிக்கும் வகையில் 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகளை கைது செய்த போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துபவர்களை முடக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். நடைபயணம் மேற்கொள்ளும் விவசாயிகள், பொதுமக்களுக்கு தடைவிதிக்ககூடாது. நடைபயணத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, ராமச்சந்திரன், வட்டார செயலாளர்கள் ஜெயராமன், அப்புனு, நகர செயலாளர் ஜோதிபாசு, மாவட்டக்குழுஉறுப்பினர்கள் ராஜேந்திரன், பூபதி, மாதையன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரியும் அரூர் கச்சேரி மேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரூர் ஒன்றிய செயலாளர் மல்லிகா, மொரப்பூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு, பாப்பிரெட்டிப்பட்டி சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட உறுப்பினர்கள் சின்னராசு, மாது, வட்டகுழு குமார், கோவிந்தன், ஏழுமலை, முருகன், தனலட்சுமி, வேடியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story