திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் - டி.டி.வி.தினகரன்


திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் - டி.டி.வி.தினகரன்
x
தினத்தந்தி 4 Aug 2018 11:19 AM IST (Updated: 4 Aug 2018 11:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் என கரூரில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

கரூர்,

கரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிலை கடத்தல் வழக்கினை விசாரிக்கும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் ஒரு நேர்மையான அதிகாரி. தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக காணாமல் போன சிலைகளை கண்டுபிடித்து மீட்டு வருகிறார். இந்த அரசாங்கம் அவரை பல்வேறு முறை மாற்ற நினைத்தபோதிலும் நீதிமன்ற ஆலோசனையின் பேரில் அவர் சிலை திருட்டை அம்பலப்படுத்தினார். இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவும், சிலரை காப்பாற்றுவதற்கான முயற்சியாகவும் தான் தெரிகிறது. இதனை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்? என்பதற்கான காரணமும் புலப்படவில்லை. நாமக்கல் முட்டை ஊழல், செய்யாதுரை கான்டிராக்டரின் ஊழல் உள்ளிட்டவற்றில் சி.பி.ஐ. தலையிட்டு விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். ஆசிரியர்களின் சம்பளம் குறித்து முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியதாகும்.

கரூரில் துணை சபாநாயகர் நின்று எவ்வளவு ஓட்டு வாங்குவார் என்பதை பார்ப்போம். அ.தி.மு.க.வின் செல்வாக்கு தமிழகத்தில் உயரவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அ.ம.மு.க சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். ஆர்.கே.நகரை போல் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story