தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகுவதை தடுக்க ரூ.16 கோடியில் தடுப்பணை கட்டப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகுவதை தடுக்க ரூ.16 கோடியில் தடுப்பணை கட்டப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2018 4:30 AM IST (Updated: 4 Aug 2018 9:58 PM IST)
t-max-icont-min-icon

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகுவதை தடுக்க பருத்திகடவில் ரூ.16 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

களியக்காவிளை,

குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு பலிகர்மம் கொடுக்கப்படும். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் புதிய படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.

அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கடல் சீற்றத்தால் பாதிக்கப்படும் பூத்துறையில் நபார்டு வங்கியின் உதவியுடன் ரூ.15 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும். குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகுவதை தடுக்க பருத்திகடவு பகுதியில் ரூ.16 கோடி செலவில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரப்பர் விலை வீழ்ச்சி தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

களியக்காவிளையை சேர்ந்த வாலிபர் அனீசை கேரள போலீசார் அழைத்து சென்றபோது, மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் தமிழக அரசு  தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனிஷ் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டல் முறையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக கல்வித்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். எனவே விசாரணையும் சரியான பாதையில் செல்லும் என நம்புகிறேன். பன்னீர்செல்வம் ராணுவ ஹெலிகாப்டரை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தேவையற்றது.

சிலை கடத்தல் விவகாரத்தை பொறுத்தவரையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் போலீஸ் அதிகாரி மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்.

வருமான வரிசோதனை காழ்புணர்ச்சியின் காரணமாக செய்யப்படவில்லை. தொழில் செய்பவர்கள் முறையாக கணக்கு தாக்கல் செய்திருந்தால் ஏன் கவலைப்படவேண்டும்.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம். ஆனால் அதற்கு முன்னதாக மேம்பாலங்கள், சாலைகள் சரிசெய்யப்பட்டால் தான் வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நம் மாவட்டத்திற்கு வருவார்கள். சாய்–சப் சென்டர் கொண்டுவர ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்து அலுவலகம் கட்டப்பட்டது. தற்போதுள்ள நிலையில் 50 ஏக்கர் நிலம் தேவை. இந்த மாவட்டத்தில் அமைய சூழ்நிலை இல்லாவிட்டால் வேறு மாவட்டத்தில் அமைக்கப்படும். விமான நிலையம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மார்த்தாண்டத்தில் பம்மம் முதல் வெட்டுமணி வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதியான வெட்டுமணியில் இருந்து மார்த்தாண்டம்  பஸ் நிலையம் வரை முதற்கட்டமாக விரைவில் போக்குவரத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மேம்பாலம் பணிகளை பார்வையிட்டார். அவருடன் பா.ஜனதா கட்சியினர் உடன் சென்றனர்.

Next Story