குற்றாலம் சாரல் திருவிழா நிறைவு: குத்தரபாஞ்சான் அருவி சுற்றுலா தலமாக்கப்படும் அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு
குத்தரபாஞ்சான் அருவி சுற்றுலா தலமாக்கப்படும் என்று குற்றாலம் சாரல் திருவிழா நிறைவு நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.
குற்றாலம்,
குத்தரபாஞ்சான் அருவி சுற்றுலா தலமாக்கப்படும் என்று குற்றாலம் சாரல் திருவிழா நிறைவு நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.
சாரல் திருவிழா நிறைவுநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 28–ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி, தோட்டக்கலை கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி, நீச்சல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, ஆணழகன் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
சாரல் திருவிழா இறுதி நாளான நேற்று காலை ஐந்தருவியில் இருந்து கலைவாணர் கலையரங்கம் வரை மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் சாரல் திருவிழா நிறைவு நிகழ்ச்சி கலைவாணர் கலையரங்கில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், இன்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்னர். மாவட்ட திட்ட இயக்குனர் பழனி வரவேற்றார்.
அமைச்சர் ராஜலட்சுமிவிழாவில், அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் உள்ள மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம். சுற்றுலா பயணிகள் தங்களது கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு இங்கு வருகிறார்கள். தமிழகத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதற்கு இங்கு பாதுகாப்பு நல்ல முறையில் இருப்பதே காரணம் ஆகும். மேலும் இங்கு இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இன்பதுரை எம்.எல்.ஏ. பேசும்போது மகேந்திரகிரி பகுதியில் உள்ள குத்தரபாஞ்சான் அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று கூறினார். அடுத்த ஆண்டு அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் ஷில்பாகலெக்டர் ஷில்பா பேசுகையில், ‘குற்றாலம் எழில் கொஞ்சும் இடம் ஆகும். மிகச்சிறந்த சுற்றுலா தலமான இங்கு அருவிகளில் மூலிகை கலந்து வருவது சிறப்பு. குற்றாலத்துக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சமும், பொது நிதியின் கீழ் ரூ.1 கோடியே 8 லட்சமும், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சமும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன’ என்றார்.
விழாவில், நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாசின் அபுபக்கர், குற்றாலம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கனகராஜ், அக்ரோ சங்க தலைவர் சண்முகசுந்தரம், மாநில கூட்டுறவு சங்க விற்பனை பிரிவு துணை தலைவர் கண்ணன், அ.தி.மு.க. நகர செயலாளர்கள் சுடலை, கார்த்திக்குமார், கிருஷ்ணமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் நன்றி கூறினார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில், பள்ளி மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இசை–நடன நிகழ்ச்சி, மெல்லிசை கச்சேரி நடந்தது.