கபடி போட்டிக்கு அழைத்து வந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது
கபடி போட்டியில் கலந்துகொள்வதற்காக அழைத்து வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கான மண்டல அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் அரசு பள்ளியில் இருந்து உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் (வயது 45) 20–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளை அழைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகி விட்டதால் ராஜபாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிவிட்டு காலையில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளலாம் என ஆசிரியர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அனைவரும் அங்கு தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு மாணவிக்கு ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தார்.