சூலூர் அருகே புறவழிச்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
சூலூர் அருகே புறவழிச்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சூலூர்,
கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவருடைய மகன் கவுதம்(வயது 25), இவர் எஸ்.என்.ஆர். கல்லூரியில் முதுநிலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இருகூர் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரது மகன் கோகுல்நாத்(24), சிதம்பரநாத் (24) இவர்கள் இருவரும் சிங்காநல்லூரில் உள்ள ஆர்.என்.டி. ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுடைய நண்பர்கள் சல்மான் பாரிஸ், விக்னேஷ்வர், மற்றும் ஒரு ஒருவர் ஆகிய 6 பேர் நேற்று விடுமுறை தினம் என்பதால் கிரிக்கெட் விளையாடுவதற்காக நீலாம்பூர் பகுதிக்கு காரில் சென்றனர். காரை சிதம்பரநாத் என்பவர் ஓட்டினார். காலை 9.30 மணி அளவில் கார் வெங்கிட்டாபுரம் சந்திப்பு அருகே நீலாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் அமிர்தா கல்லூரிக்கு சொந்தமான கார் ஒன்று பீளமேடு விமான நிலையத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து 2 பேர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு செல்ல சிந்தாமணிபுதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த காரை பாலக்காட்டை சேர்ந்த வினீத் என்பவர் ஓட்டி வந்தார்.
கிரிக்கெட் விளையாட சென்றவர்களின் கார் சூலூர் அருகே நீலாம்பூர் புற வழிச்சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம் சந்திப்பில் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே விமான நிலையத்தில் இருந்து சிந்தாமணிபுதூர் நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. மேலும் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதினார். இந்த விபத்தில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் 2 கார்களிலும் வந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயகுரல் எழுப்பினர்.
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள், மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த விபத்தில் கிரிக்கெட் விளையாட சென்ற எஸ்.என்.ஆர். கல்லூரி மாணவர் கவுதம், சிங்காநல்லூர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கோகுல்நாத், சிதம்பரநாத் ஆகிய 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் அந்த காரில் வந்த சல்மான் பாரிஸ், விக்னேஷ்வர் உள்பட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். எதிரே விமான நிலையத்தில் இருந்து வந்த அமிர்தா கல்லூருக்கு சொந்தமான காரில் வந்த டிரைவர் வினீத், சுபித்தேவ்(45), மோஹித்(40) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். மோட்டார் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கணியூரை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சூர்யா என்பவரும் பலத்த காயமடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் போலீசார் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சூலூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்த உடனே, கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், விபத்து எதனால் ஏற்பட்டது என கண்டறிய சூலூர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சூலூர் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சண்முகம் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், கிரிக்கெட் விளையாடவர்கள் சென்றவர்களின் கார் கடுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் மீது மோதியதால், சாலையின் குறுக்கே யாராவது யாராவது வந்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கார்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதிவழியாக சென்றவர்கள் விபத்து நடந்த இடத்தில் குவிந்ததால் சிறிது நேரம் நீலாம்பூர் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சூலூர் சப்–இன்ஸ்பெக்டர் லெனின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்.