வருகிற 15-ந் தேதிக்குள் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லையென்றால் ஒருபோக சம்பா சாகுபடி செய்ய முடியாது


வருகிற 15-ந் தேதிக்குள் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லையென்றால் ஒருபோக சம்பா சாகுபடி செய்ய முடியாது
x
தினத்தந்தி 5 Aug 2018 4:15 AM IST (Updated: 5 Aug 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 15-ந் தேதிக்குள் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லையென்றால் ஒருபோக சம்பா சாகுபடி செய்ய முடியாது என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் விடப்படாததால் மகசூல் இழப்பு ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் 6 ஆண்டுகளாக சம்பா சாகுபடி முழுமையாக நடைபெறவில்லை. கர்நாடகத்தில் கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பியுள்ளன. குறுவை சாகுபடி செய்ய கர்நாடகஅரசு திட்டமிட்டு தண்ணீர் திறந்துவிடவில்லை.

அப்போது அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்துவிட்டு மழை பெய்தவுடன் உபரி தண்ணீரை தற்போது திறந்துவிடுகிறது. குறுவை பருவத்திலேயே கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டிருந்தால் குறுவை சாகுபடி செய்திருக்கலாம். இப்போது கர்நாடகம் திறந்துவிட்ட தண்ணீரை கூட சேமித்து வைப்பதற்கும் தமிழகத்தில் தடுப்பணைகள் எதுவும் கட்டப்படாததால் உபரி தண்ணீர் கடலில் கலக்கிறது.

ஆறுகள், வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாராததாலும், மதகுகளை பராமரிக்காததாலும் கிடைத்த தண்ணீரையும் கடைமடை பகுதிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. குளங்கள், ஏரிகளிலும் தண்ணீரை நிரப்ப முடியவில்லை. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்னும் கடைமடைக்கு சென்று சேரவில்லை. வருகிற 15-ந் தேதிக்குள் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை என்றால் ஒரு போக சம்பா சாகுபடியும் செய்ய முடியாது.பொதுப்பணித்துறையில் பாசன பிரிவை தனியாக பிரித்து தன்னாட்சி பெற்ற துறையாக மாற்ற வேண்டும். மரபுவழி மருத்துவம் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கிறது. எனவே மரபுவழி மருத்துவத்துக்கு உரிய பயிற்சி அளிக்கும் விதமாக கொள்கை திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். ஹீலர் பாஸ்கரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சங்கத்தின் மாநில தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட தலைவர் துரை.பாஸ்கரன், செயலாளர் மணி, ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் மகேஸ்வரன், இளைஞரணி தலைவர் அறிவு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story