சேலத்தில் பரபரப்பு: காதலி அழைத்ததால் பெண் வேடமிட்டு பள்ளிக்குள் புகுந்த கல்லூரி மாணவர்


சேலத்தில் பரபரப்பு: காதலி அழைத்ததால் பெண் வேடமிட்டு பள்ளிக்குள் புகுந்த கல்லூரி மாணவர்
x
தினத்தந்தி 5 Aug 2018 3:45 AM IST (Updated: 5 Aug 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் காதலி அழைத்ததால் பெண் வேடமிட்டு பள்ளிக்குள் புகுந்த கல்லூரி மாணவரை காவலாளி மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று காலை ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது பர்தா அணிந்த ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து வேகமாக சென்றார். இவருடைய நடவடிக்கைகளை பார்த்ததும் பள்ளி காவலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் அந்த பர்தா அணிந்தவர் அருகே சென்று, ‘உன் பெயர் என்ன?, என்ன வகுப்பு படிக்கிறாய்?’ என்று கேட்டார்.

ஆனால், பர்தா அணிந்தவர் பேசாமல் தயங்கி நின்றார். தொடர்ந்து பள்ளி காவலாளி அதட்டி கேட்டபோது, பர்தாவிற்குள் இருந்தவர் ஆண் குரலில் பேசினார். அதன்பிறகுதான் பர்தா உடை அணிந்து வந்தது ஆண் என தெரியவந்தது. இதையடுத்து காவலாளி பர்தா அணிந்து பெண் வேடமிட்டு வந்த அந்த நபரை கட்டி அணைத்துக் கொண்டு கத்தினார்.

இதைக்கேட்டதும், முதலில் அங்கு நின்றவர்கள் காவலாளி தான் பெண்ணை கட்டிப்பிடிப்பதாக தவறாக நினைத்து ஓடிவந்தனர். ஆனால் அவர் அருகே சென்ற பிறகுதான் வாலிபர் ஒருவர் பெண் வேடமிட்டு பள்ளிக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த 19 வயது வாலிபர் என்பதும், சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் வாலிபர் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை ஓராண்டாக காதலித்து வந்தார். காதலி அழைத்ததின் பேரில் பள்ளியில் நடக்கும் விழாவிற்கு அவர் பெண் வேடமிட்டு வந்துள்ளார். இந்த பர்தாவை அவருக்கு நண்பர் ஒருவர் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story